விரிவுரையாளர் சார்லஸ் ஹாப்ஸ் அடிக்கடி சொல்லும் ஒரு பெண்ணின் கதை!
அந்தப்பெண் சமையலறை (scullery) வேலை செய்பவர். ஒரு நாள் அந்தப்பெண் ஹாப்ஸின் உரையை கேட்க நேர்ந்தது. அவரை சந்திக்கவும் செய்தாள். அப்போது பாராட்டுதலுக்காக, "நீங்கள் கொடுத்துவைத்தவர், உங்களுக்கு இந்த வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது!", அருமையாக செய்கிறீர்கள், என்றாள். ஹாப்ஸ், "பெண்ணே, உனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லையா?" என்று வினவினார். இல்லை! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தில்லை என்றாள் அவள். "நீ என்ன செய்கிறாய்"? - ஹாப்ஸ். "இந்த கடையில் உருளைகிழங்கும், வெங்காயமும் உறிக்கிறேன்", என்றாள்.
"எவ்வளவு நாட்களாக செய்கிறாய்?"
“பதினைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது!”
"எங்கே உட்கார்ந்து வேலை செய்கிறாய்?"
அந்த கடையில் கடைசி படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு பல நேரங்களில் வேலை செய்வேன். "ஏன் இந்த கேள்வி?" ஆச்சரியமுற்றாள்!
"அப்போது உன் கால்களுக்கடியில் என்ன இருந்தது?"
"தரைதான். வேறென்ன? அருமையான கற்களால் கட்டப்பட்ட தரை!"
"பெண்ணே, உனக்கு நான் ஒரு வேலை தருகிறேன். செய்வாயா?"
"ம்ம். சொல்லுங்கள், முயற்சிக்கிறேன்."
"உன் காலுக்கடியில் கண்ட கற்களைப்பற்றி அறிந்து, உனக்குத்தெரியவந்த அனைத்து விவரங்களையும் எனக்கு எழுது. கண்டிப்பாக எழுத வேண்டும்" என்று சிறு அன்புக்கட்டளையிட்டார், சிரித்துக்கொண்டே!
மறுநாள் வெங்காயம் உறிக்கும்போது, தரையை பார்த்துக்கொண்டே இருந்தாள். பின்னர், அதைப்பொல் ஒரு உடைந்த கல்லை பரணிலிருந்து எடுத்து பக்கத்திலிருந்த கல் தொழிற்சாலைக்கு சென்று, இந்த கல்லை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்றாள். அது எப்படி செய்யப்பட்டது என்று அங்கு தெரிந்து கொண்டாள்.
அதனை மட்டும் எழுதினால் நன்றாக இருக்காதென்று, கொஞ்ச நேரம் ஒதுக்கி, அருகாமையிலுருந்த நூலகத்திற்கு சென்றாள். பல புத்தகங்களிலிருந்து சிறு குறிப்புகள் அந்த கல்லைப்பற்றி தெரிந்துகொண்டாள்! கல் செய்யும் முறையிலிருந்து, கல் தோன்றிய வரலாறு வரை தெரிந்துகொள்ள அவளுடைய ஆவல் விரிவடைந்தது! கற்பனை வளர்ந்தது. ஒவ்வொரு முறையும் நூலகம் சென்று குறிப்புகள் எடுத்தாள்! இங்கிலாந்தில் 120 வகை கற்கள் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்று அனைத்தும் தெரிய வந்தது!
இப்போது இதனை ஹாப்ஸுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினாள்! 36 பக்க கடிதம் ஒன்றை அவருக்கு எழுதினாள்.
சில நாட்கள் கழித்து ஹாப்ஸிடமிருந்து கடிதம் வந்தது - காசோலயுடனும் அடுத்த சிறு வேலையுடனும்! ஆச்சரியப்பட்டாள். ஹாப்ஸ் அப்பெண்ணின் கற்களைப்பற்றிய தொகுப்பை சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதில் கிடைத்த பணத்தை அப்பெண்ணுக்கு காசோலையாக அனுப்பியிருந்தார். இப்போது அந்த சமையலறையில் இருக்கும் ஏதாவதொரு உயிரினத்தைப்பற்றி தெரிந்தவைகளை தொகுத்து தரமுடியுமா? என வினவியிருந்தார்.
அவளுக்கு சமையலறை உயிரினம் என்று உடனே தொன்றியது எறும்புதான்! இப்பொது முந்தைய முறையைவிட அதனைப்பற்றி அறியும் ஆர்வம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. பல வகையான் எறும்புகளைப்பற்றி ஆராய்ந்தாள். ஊசிமுனையில் நிற்கக்கூடிய சிறு எறும்புகளையும், மனிதக்கால் அளவு உள்ள பெரிய எறும்புகளையும் பற்றி தெரிந்துகொண்டாள். எறும்பு பண்ணை ஒன்றையே உருவாக்கினாள், ஆராய்வதற்காக!
கடைசியாக 350 பக்கங்கள் கொண்ட எறும்பு பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டாள். அவள் இறப்பதற்கு முன் நினைத்தறியாத பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததோடல்லாமல், கற்பனை செய்யாத பல அநுபவங்களையும் பெற்றாள்.
இந்தப்பெண்தான் ஒரு முறை தனக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று புலம்பியவள்!
சிலர் வாய்ப்பு தன் வீட்டு கதவை தட்டும் என்று நினைத்து காத்திருக்கிறார்கள். இங்கே ஒரு உதாரணம் காட்டப்பட்டது. வாய்ப்பு தன் கதவை தட்ட வேண்டும் என்று காத்திருக்கப்போகிறீர்களா? அல்லது உங்கள் வாய்ப்பினை நீங்கள் உருவாக்கிக்கொள்ளப்போகிறீர்களா?